புத்தகங்கள் தரும் சிறகு

bookwings

வாசிப்பு எப்போதுமே எனக்கு பிடித்ததாய் இருந்திருக்கிறது. ஒரு அம்புலிமாமா\கோகுலம் புத்தகத்தை இரண்டு,மூன்று மாதங்கள் வைத்து கொஞ்சம்கொஞ்சமாய் படித்து முடித்த காலம் முதல் இப்போது சிலசமயங்களில் இரண்டு,மூன்று மணிநேரங்களில் ஒரு புத்தகத்தை படித்து முடிப்பது வரை வாசித்தல் எப்போதும் இன்பமே. புத்தகங்களை ரசித்து வாசித்து முடிப்பதைவிட, வாசித்ததும் “நீ கேளேன் ….நீயாவது கேளேன்…” என்று அதைப் பற்றி கூறுவது தனி இன்பம். நான் படித்த சில புத்தகங்களின் அறிமுகங்களை http://omnibus.sasariri.com/ இணையதளத்திற்காக அவ்வப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன், அந்த பதிவேற்றங்கள் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். சமீபத்திய சில புத்தகஅறிமுக பதிவுகளை இங்கு பகிரவில்லை என்பதால் அந்த பதிவுகளுக்கான இணைப்புகளை இங்கே பகிர்கிறேன் (வரலாறு முக்கியம்)

கதை வளர்த்தல்  –  http://omnibus.sasariri.com/2013/06/blog-post_7.html

வேப்பெண்ணெய்க் கலயம்  –  http://omnibus.sasariri.com/2014/07/blog-post.html

Immortals of Meluha  –   http://omnibus.sasariri.com/2014/08/immortals-of-meluha_25.html

Advertisements

Sub-Zero

frozen

தீபாவிற்கு காலையிலேயே போன் செய்து விஷ் செய்து விட வேண்டும், மாலையில் அவள் பிஸி ஆகிவிடக்கூடும் என்று அவள் கைப்பேசிக்கு அழைத்தேன்.

“சொல்றீ எப்படி இருக்க?…”

ஹேப்பி பர்த்டே தீபு…எழுப்பிட்டேனோ?

“தேங்க்ஸ்டீ… 6.30க்கெல்லாம் எழுந்துட்டேன்.ரெடி ஆகிட்டேன், நிறைய டைம் இருக்கு ஆபிசுக்கு”

என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?…

வீக்டே ஆஸ்யூஸூவல் தான் ஆபிஸ், கோவில்…அப்பறம்? பெஸ்ட் ப்ரெண்டுக்கு விஷ் பண்ணிய்ச்சா?

அவள் பெஸ்ட்டை அழுத்தி சொன்னது புரிந்து சிரித்துக்கொண்டே” இதோ பண்ணேணே” என்றேன்.

“உன் பெஸ்ட் ப்ரெண்ட் காயத்திரிக்கு விஷ் பண்ணிட்டியான்னு கேட்டேன் ?” என்றாள் .

“நிறைய டைம் டிபரன்ஸ்…மெயில்ல விஷ் பண்ணிருக்கேன்…அவ போன் நம்பர் இல்ல” என்றேன்.

“போன் நம்பர் இல்லையா!? ” என்று அவளக்கு வந்த ஆச்சர்யத்தை அவளே அலட்சியபடுத்திவிட்டு “அதான் ஸ்கைப் இருக்குமே அதுல கொஞ்சி குலாவினா  போதாது?”என்றாள் சிரிப்போடு.

நானும் சிரித்துக்கொண்டே”ஒருவாரம் பத்துநாள்க்கு ஒருமுறை பேசுவோம்” என்றேன்.

“எப்டியிருக்காம் யு.எஸ்ஸு?” எனக் கேட்டாள்.

“ரொம்ப coldனு சொன்னா” என்றேன்.

“அவள விடவா?” என்றாள்.”

“தீ..பூ, காயத்ரி ஒன்னும் cold இல்ல,அப்டி சொல்லாத” என்றேன் சட்டென்று.

அவளும் சிரிப்போடு”சரிசரி விடு,உன் பிரெண்டு எப்டி வேணா இருக்கட்டும் ….அப்பறம் எப்போ இந்தியா ட்ரிப் ?” என்றதும் பேச்சு comfort zoneக்கு மாறி தொடர்ந்தது.

பேசி முடித்து ,போன் திரை call duration காட்டி அனைவதை பார்த்தபடி யோசித்தேன், என்னிடம் காயத்திரியின் போன் நம்பர் இல்லை! அவள் coldதானோ? “இந்த தீபு இருக்காளே… பாவமே பாக்காம என்னை discomfort zoneல தள்ளி , self analyaisசெய்ய வெச்சிடுவா” என நினைத்துக்கொண்டேன்.

—-***—-

கல்லூரி முதலாண்டு – தெரிந்தவர்கள் ஒருவர் கூட இல்லாத கோர்ஸ்! முதல் ஒன்றிறன்டு மாதங்களிளேயே மூன்று கலகல தோழிகள், ஒரே பெஞ்ச், அதில் தீபாவும் ஒருத்தி. மூன்றாவது மாடி வகுப்பறை, நான்காவது மாடி லேப். நேரத்தில் கிளம்பினாலுமே பஸ்ஸில் இடம் கிடைப்பது கடினம், லேட் என்றால் அவ்வளவுதான்… கல்லூரி நேரம் முடிந்தும் லேபில் இருந்த என்னிடம் பை, லைப்ரரி புக் என எல்லாவற்றையும் கொண்டு வந்து தந்துவிட்டு “நான் கிளம்பறேன் டீ” என்றாள் தீபா.”வந்து ஹெல்ப் பண்ணேன், ஒரு ஐஞ்சு நிமிஷத்துல போகலாம்” என்றேன்.முறைத்தபடி “மத்தவங்க பிரைவேட் பஸ்,உன் CSபிரெண்டு உனக்கு இடம் போட்ருப்பா ,பஸ் முழுக்க கூட்டம் திண்டாடினாலும் நீ போய் உக்காந்து கதை பேசுவ. நான் பர்ஸ்ட் பஸ்ல போறேன்,நீ இவங்களோட கீழ வா.” என்று கிளம்புவாள்.

தீபா சொன்னதுபோலவே காயத்ரி எனக்கு இடம் பிடித்திருப்பாள் ,நான் பஸ்கள் நிற்கும் இடத்திற்கு வரும்போது படிவரை கூட்டம் சேர்ந்திருக்கும். பஸ்ஸை சுற்றி வந்து ஜன்னல்களில் தேடி காயத்ரி இருக்கும் சீட்டை கண்டுபிடித்து உள்ளே செல்வேன், நிரம்பி வழியும் அந்த பேருந்தில் உள்ளே செல்ல முயற்சி செய்யும் என்னை விநோதமாக பார்த்தபடி வழிவிடுவார்கள்.முதல் நாள் உட்கார்ந்ததும் “முன்னாடி லெப்ட்ல அந்த பொண்ணு முறைக்கிற மாதிரி இருக்கில்ல?” என்றேன் காயத்ரியிடம் “ஆமா! சீட்ல javaபுக் காட்டி பிரெண்டு restroomபோயிருக்காங்கன்னு சொல்லிருந்தேன் …lab coat,Genetics bookட நீ வந்து உக்காந்ததும் காண்டாகிருக்கும்” என்றாள் சாதரணமாக. உலக மக்கள் அனைவரிடமும் எகோபித்தமாய் nicest person பெயர் வாங்க முற்பட்டிருந்த எனக்கு ,என்னை அந்த இன்ஜினியரிங் பெண் rudeஎன நினைத்திருப்பாள் என கவலையாய் இருந்தது.ஆனால் labபே கதி என்றாகி நாள் தவறாமல் லேட் ஆக ஆரம்பித்து …கால் வலியோடு வரும்போது  இப்படி முறைக்கும் சுற்றி உள்ள சீட் கிடைக்காதவர்களுக்காக இரண்டு நிமிட அடையாள மௌனம் அனுசரித்துவிட்டு மெதுவாக வானத்து மனுஷங்க ,பாவ் பாஜி,உபேந்திரா,small wonder,sepoy mutiny,என ஏதோஏதோ ஒரு உரையாடலில் மூழ்கிவிடுவது பழகியது . காலையிலும் காயத்திரி நான் ஏறும் பஸ்ஸடாப்பிற்குதான் வருவாள் ,பேசிவைத்துக் கொள்ளாமலே அவள் ஒரு நாள், நான் ஒரு நாள் என ஜன்னல் சீட்டில் அமர்வோம்.

மொத்தமாக 4,5 முறை தமிழுக்கு combined class நடந்தபோது என் தோழிகள் “நாங்க உட்காருற பெஞ்ச்லதான் உட்காரனும்” என்று மிரட்டல் விடுத்தாலும் அவளுடன் சென்று அமர்வேன்.வகுப்பிற்கு வந்ததும் “cold face cold heart ” -தீபா எடுத்து கொடுக்க மூவரும் சூழ்ந்துவிடுவார்கள்  “உன் பிரண்டு எங்களுக்கு ஹாய் சொல்லமாட்டா, பேசமாட்டா, சிரிக்கக்கூட மாட்டா….ஆனா நீ எங்கள விட்டுட்டு அவ கூட போய் உக்காருவ?” என்று குற்றவாளி கூண்டில் ஏற்றுவார்கள். நான் உடனே “சரி அப்ப நீங்க முனு பேரும் என்னோட பேசாதிங்க, நான் தனியா உக்காந்து லஞ்ச் சாப்பிடறேன் -5th stdலலாம் அதான் வழக்கம்” என்பேன். “ப்ரெண்ட்ஷிப்னா ஷேரிங்டீ…” என மறுபடி ஆரம்பிப்பார்கள் ” . “எது டூ பென் இருக்கா-ஷேரிங்கா? அதும் 5thstd தான்.அதான் வளந்துட்டோம்ல்ல இதுக்காகலாம் ஜட்ஜ் பண்ணக்கூடாது ” இப்படி ஒரு விளங்கா விளக்கம் குடுத்ததும் மூன்று பேரும் மொத்தமாய் “டைம்வேஸ்ட்” என்றபடி விட்டுவிடுவார்கள்.

_______

ஒன்பதாம் வகுப்பில் எங்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எப்போதுமே கூட்டம்கூட்டமாய் ந்யூ அட்மிசன்கள் வருவது வழக்கம். விதவிதமான மெட்ரிக் பள்ளி, இருந்த இரண்டு CBSEபள்ளிகள் என 8ஆம் வகுப்புவரை உயர்தர சிலபஸில் திக்கிதினறியவர்கள் பத்தாம் வகுப்பில் அதிக மார்க் எடுக்க வரும் Russian MBBSஸாய் விளங்கியது அரசு பள்ளி.அதில் CBSE பள்ளியிலிருந்து வந்துசேர்ந்த பத்து பேரில் ஒருத்தி காயத்ரி.பத்து பன்னிரெண்டு பேர் கொண்ட எங்கள் குழு இவர்கள் அனைவரையும் “எங்க ஏரியா உள்ள வராத” என்றபடியே டீல் செய்வோம்.9 வது முழுவதும் காயத்ரியுடன் பேசியதாய்கூட நினைவில்லை.

பத்தாம் வகுப்பு ட்யூசன் சேர எனது தோழிகள் அனைவரும் வெகு தூரத்தில் இருக்கும் ஒரு சார் வீட்டிற்கு செல்ல ,சைக்கிள் ஓட்ட தெரியாததால் நான் நடககும் தூரத்தில் வேறு ஒரு டீச்சரிடம் செல்ல வேண்டிய கட்டாயம். அங்கு ப்ரி.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை ட்யூஷன் உண்டு , சின்சியர் மிஸ்.தனித்தனியாக தான் கற்று கொடுப்பார்கள் , குறிப்பிட்ட நேரமெல்லாம் இல்லை காலையில் ஸ்கூல் செல்லும் முன் 1-2 மணிநேரம் மாலை ஸ்கூல் முடிந்ததும் 2,3 மணி நேரம். நான் சேர்ந்து 2 நாளில் காயத்ரியும் அவள் நண்பர்களும் சேர்ந்தார்கள்.இந்த பீட்டர்கள் மத்தியில் நானா? என நொந்து கொண்டேன்.ப்ராக்டிஸ் பேப்பர்கள் செய்யும் போது சண்டைக்கான அறிகுறிகள் நிறைய தென்பட்டது. ஒரு வாரத்தில் நிலமை முன்னேறி-மோசமாகி நானும் காயத்ரி மட்டும் அதிவேகமாக கற்றுக்கொள்வதாய் முடிவு செய்து தனி அணியாய் ஆக்கினார் டீச்சர். “முடிச்சாச்சா? பேஜ் டர்ன் பண்ணட்டா? எந்த சம்?” இது போன்ற சல வார்த்தைகள் மட்டுமே பேசிக்கொள்வோம்.இந்த வருடம் முழுக்க நாளுக்கு 5 மணி நேரம் மௌனவிரதம் இருக்கவேண்டி இருக்கும் போல என ஸ்கூல் சென்று தோழிகளிடம் நொந்து கொண்டேன்.”எங்க ட்யுசனுக்கு வந்துடு” என்றார்கள்.நான் எப்போ சைக்கிள் கத்துக்கிட்டு, வாங்கி …ம்ஹும்… “அவ டூ டிஜிட் இண்டூ டூ டிஜிட் வாயிலேயே மல்டிப்ளை பண்றா தெரியுமா?” விடாமல் புலம்பினேன் …தோழிகள் “Rough columnல போட்டாலும் அதே ஆன்செர் தான் வரும்…மொத்தம் 100 மார்க் தானே? சும்மா புலம்பாத” என்றார்கள். அசுர வேகத்தில் மேத்ஸ் செய்யும் காயத்ரிக்கு ஈடு கொடுக்கவோ ,இம்ப்ரஸ் செய்யவோ மேத்ஸில் மட்டும் மந்தமாக இருந்த நான் ,ஸ்கூலில் எல்லாம் ஓவர்டைம் செய்து கற்றுகொள்ள ஆரம்பித்தேன்.ஸ்கூலில் பொதுவாக மொத்தமே 1,2 பாடங்கள் தான் நடக்கும் மற்றபடி ப்ரீயாக இருந்தது வசதியாய் இருந்தது .

ஒரு மாதத்தில் காயத்ரிக்கும் எனக்கும் பேசாமலே நல்ல அன்டர்ஸ்டான்டிங் வந்திருந்தது. அவள் கணக்குகளை முடித்துவிட்டு நான் முடிக்கும் வரை காத்திருப்பதும், நான் சீக்கிரமாக படித்துவிட்டு அவள் மணப்பாடம் செய்யும் வரை காத்திருப்பதும் சரிவந்தது.அவள் தோழிகளுக்கு கூட அவள் எந்த பொருளும் தராமல் அவர்களும் கேட்காமல் இருப்பதுபார்த்து வியந்தேன். ஒரு வியாழக்கிழமை அதிகாலை தனியாக அமர்ந்திருந்த எங்களிடம் மிஸ் வந்து கெமிஸ்ட்ரி டெஸ்ட் இல்லை எனக்கூறி மேத்ஸ் செய்யச்சொன்னார்.மணப்பாடம் என்றாலே கதறும் நான் ஈக்வேசன்களை பாதி புரிந்து பாதி மணப்பாடம் செய்து, பாடாய்பட்டு படித்திருந்தேன். “ச்ச… மர்மதேசம் கூட பாக்காம படிச்சேன்” என்று நான் வாய்விட்டு புலம்ப ,காயத்ரி என்னை பார்த்து மொத்தமாய் இரண்டே வரியில் நாடகத்தின் கதை சுருக்கத்தை சொல்லிவிட்டு கணக்கை தொடர்ந்தாள். அவள் டீவியெல்லாம் பார்ப்பாள் என்று அப்போது என்னால் கற்பனை கூட செய்ய முடியாததாலும்,நான்கு மணிக்கே எழுந்து படித்ததாலும் அது கனவு என்றே நம்பினேன் .மறுபடி பழைய 10 வார்தை உரையாடலே தொடர்ந்தது.அடுத்த வியாழக்கிழமை “நேத்து மர்மதேசம் பாத்தியா?” என்றாள்…மிகச்சரியாக அப்போது இருந்துதான் பேச ஆரம்பித்தோம்………(மாண்டேஜ் முழுக்க பேச்சு)

ட்யூஷன் வெரான்டாவின் அருகில் வெளியே நாங்கள் மட்டும் உட்கார ஒரு தனி இடம். படிக்கும்-எழுதும் வேலையை செய்து கொண்டே எப்போதும் பேச்சு, யாரும் கவனிக்காதபடி .சமயத்தில் டெஸ்டுகளின் போதும் கூட(நேர்மைக்கு மறு பெயர் நாங்கள்) நாங்கள் பேசுவதை ஜன்னல் வழி கேட்டுவிட்டு “கான்சன்ட்ரேட் பண்ணலைன்னா சென்டம் வராதும்மா….எழுதிமுடிச்சிட்டு பேசுங்க” என்பார்கள் எங்கள் மிஸ்! ட்யூசனிலிருந்து ஸ்கூலிற்கு பின் ஸ்கூலிலிருந்து ட்யூஷன், பின் வீட்டுக்கு செல்லும்போது பாதி வழிவரை என பேசிப்பேசி தீர்த்தபின்னும் ஏதோ ஒன்று குறையுதே மோடிலேயே இருப்போம். இதில் சிறப்பு என்னவென்றால் நாங்கள் உட்பட பார்க்கும் அனைவருக்கும் சாதாரண நட்பு போல் கூட இல்லாமல் சேர்ந்து படிக்கிறோம் என்பது போலத்தான் இருந்தது.ஆனால் திடீர் திட்டங்களை எங்கள் சுவடே தெரியாமல் செய்து முடிப்போம் .கிரிக்கெட் மேட்ச் அன்று ஓவர்டைம் செய்து பாடங்களை முடித்துவிட்டு லீவ் கேட்பது ,எல்லோரும் பட்டுபாவாடையில் வருவது , படிக்காத டெஸ்ட்களை மற்றவர்களை தூண்டி கான்சல் செய்வது என பெரிய லிஸ்ட் விஷயங்களுக்கு காரணம் நாங்கள் இருவரும் என்பது யாருக்கும் தெரியாது.

வீட்டிற்கு செல்ல நாங்கள் பிரியும் இடத்தில் ஒரு கடையை புதுப்பித்தார்கள்,பளிச் பெயின்ட் ஜிலீர் டேபிள் சேர் என களை கட்டியது.அங்கு நின்று உருவாகிக்கொண்டிருக்கும் கடையை பார்த்தபடி சில நிமிடங்கள் பேசிவிட்டு பிரிந்து செல்வோம்.ஒருநாள் Sub-zero cool corner என நேம்போர்ட், பனிமழை wallpaper சகிதம் அந்த கடை தயார்ஆக, எரிச்சலோடு “இதென்ன இந்த சந்துல இப்படி ஒரு ஐஸ்க்ரீம் ஷாப்? பெங்களூரோ ,பாரினோன்னு நினைப்பா?” என நான் கேட்க, காயத்ரி பயங்கரமாக சிரித்துவிட்டு “பானிப்பூரி கடைன்னு நினைச்ச தான? …நானும்தான்! விடு! அதுக்கு ஏன் இவ்ளோ டென்சன்? “என்றாள். “இல்ல ஓவர் மாடர்னா  இருக்கு, அதென்ன அபசகுன பேர் sub-zero?” என்றேன் ஏமாற்றம் குறையாமல் . “மஞ்சுநாதா ஐஸ்க்ரீம்ஸ்”னு எழுதி ஐஸ்வர்யா ராய்க்கு டைபாய்ட் வந்தமாதிரி வரைஞ்சிருந்தா ஓகேவா? “என்று சிரித்துவிட்டு ,”விடு!ஒருநாள் இங்க கார்னெட்டொ சாப்பிடுவோம் நம்ம மட்டும்”என்றாள். அடுத்த நாள் Sub-zeroவிற்கு Below zero-freezing temperature என அர்த்தம் கண்டுபிடித்தோம் .ஒரு வாரத்திலேயே எங்கள் ஊரின் வேடந்தாங்கலாக அந்த கடை மாறி காதல் பறவைகள் குவியத்தொடங்கியது. சொல்லி வைத்த மாதிரி எங்கள் இருவர் வீட்டிலும் இனி அந்த தெரு பக்கமே போகக்கூடாது என வேறு தெரு வழி ரூட்மேப் போட்டு தந்தார்கள் .கார்னர் கடை கார்னெட்டோ கனவாகவே போனது.சிலநாட்களுக்கு முன் காயத்ரியிடம் No-regrets school life பற்றி பேசும்போது ,”திரும்ப ஊர்ல மீட் பண்ணினால் கார்னர் கடைல கர்னெட்டொ சாப்பிடனும்” என்றேன் “அது இப்போ பானிபூரி கடையா கூட மாறிருக்கலாம்!?” என்று அவள் சொல்லி நாங்கள் இருவரும் சிரித்தது ஞாபகம் வந்தது.

—-****—-
எப்போதும் போல நாஸ்டால்ஜியா வந்து reverse chronological orderல் சுமார் வாழ்க்கை, சூப்பர் வாழ்க்கை, சொர்க்க வாழ்க்கை என ஞாபகப்படுத்திவிட்டு எல்லாம் முடிந்ததும் தட்டி எழுப்பி இப்போ நீ வாழந்துட்டு இருக்கற வாழ்க்கை இதோ! என நான் குடிக்க வேண்டிய க்ரீன் டீ யை காட்டி சென்றது. அதை குடித்து முடித்து gtalkல் காயத்ரிக்கு மறுபடி hi…happy birthday என டைப் செய்தேன்.4 மணி நேரம் கழித்து are you there , free now? என்ற காயத்ரியின் மெசேஜ் பார்த்து உடனடியாக ஸ்கைப் லாகின் செய்துவிட்டு hi… என ரிப்ளை செய்தேன் , சில நொடிகளில் அவள் அழைப்பு வந்தது.

“ஹாய்….ஹேப்பி பர்த்டே”என்றேன் .

“எத்தன தடவ?” என்று சிரித்தபடி…”தேங்க்ஸ்…ஒளிமயமா தெரியற” என்றாள்.

“சன்செட் வரை சுள்ளுனு வெயில் இங்க” என்றபடி எழுந்து கர்டெயினை மூடிவிட்டு அமர்ந்தேன், “புது ட்ரெஸ்ஸா காய்த்ரீ?” என்றேன் .

“பழைய ட்ரெஸ்தான், சால்வைய இழுத்துபோத்தி உக்காந்துருக்கேன்” என்றாள்.

“ஸ்நோவா?” என்றேன்

“அநியாயத்துக்கு….பக்கத்துல ஏரி, குளம்ல்லாம் ப்ரீஸ் ஆகிடுச்சு , அதுல எல்லாரும் விளையாடறாங்க க்ரவுண்ட் மாதிரி” என்றாள்.

“ஒரு நிமிஷம்…” என்றபடி “போட்டோ அனுப்பிருக்கேன்” என்றாள்.

புகைப்படத்தை ஓபன் செய்தேன் .நீர்நிலை என்றே தெரியாதபடி உறைந்திருந்த இடத்தின் அருகில் அவளும் அவள் கணவரும் .

“சூப்பரா இருக்கு…. தள்ளி தரைல நிக்கறிங்க? “என்றேன்.

“மேல உறைஞ்சிருக்கும் ,அடில தண்ணி இருக்கும்னு கேட்டதும் செம டெரர்! நீயும் நானும் பேசின புதைகுழி ஸீன்ஸ் ஆராய்ச்சிதான் ஞாபகம் வந்தது. அதுபாட்டுக்கு உள்ள போயிட்டா? ” என்றாள்.

அந்த உரையாடல் ஞாபகம் வர பலமாக சிரித்துக்கொண்டே அந்த புகைப்படத்தை பார்த்தேன், மரங்கள் சூழ பளிச் வெள்ளையாய் உறைந்திருந்த ஏரியின் அடியில் தண்ணீர், அழகான மீன்கள் எல்லாம் தெரிவது போல் கற்பனை வந்தது.

க்ரீன்டீக்கு நான் கியாரண்டீ!

Aside

                                                                                                                           

                                                                                                                                                                                    க்ரீன்டீக்கு நான் கியாரண்டீ!

                                                                                                                                 

 

                                                                                                                                                                            Image                                                                                                                       

                                                                               

   
இந்த டீயில் நிரமில்லை, இந்த டீயில் சுவையில்லை , இந்த டீயில் திடமில்லை என்று  நல்ல டீயையே  இஷ்டத்திற்குக்கு குறைசொல்பவர்கள் எல்லாம்  வாழ்கையில் ஒருமுறையாவது க்ரீன்டீ கண்டிப்பாக குடித்து பார்க்கவேண்டும்.முதலில் நிறம் -தரம்,பிராண்ட் பொறுத்து இளம் பச்சை ,பிரவுன் ,அல்லது இரண்டும் கலந்த ஒரு குழப்பமான நிறத்தில் இருக்கும்.அடுத்து சுவை -துவர்ப்புக்கசப்பு (புரிகிற மாதிரி சொல்லனும்னா- ப்ப்பாஆ).அடுத்து திடம் -இந்த டீ எவ்வளவு திடமாக இருக்குமென்றால்   அதை குடிக்க நமக்கு படுபயங்கரமான  மனோதிடம் தேவைப்படும். க்ரீன்டீ என்றால் என்ன? – கடுமையான முறைகள் அல்லாமல் பதமாய் பதப்படுத்தப்பட்ட பசுந்தேயிலைகள் அவ்வளவே.இத்தகைய பதப்படுத்தலால் இத்தேயிலைகள் சத்துக்களை தக்கவைத்து  அதிக பலன்கள் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.க்ரீன்டீ பெனிபிட்ஸ் என்று கூகிள் சர்ச் செய்தீர்களென்றால் உங்கள் இன்டர்நெட் ஸ்பீட் பொருத்து சிலபல வினாடிகளில் சுமார் 57,300,000  ரிசல்ட்ஸ் கிடைக்கப்பெறும்,உங்கள் பிக்சட் டெபாசிட் வட்டி உயரும் -வகை பெனிபிட்ஸ் தவிர கிட்டத்தட்ட எல்லா பெநிபிட்சும் இருக்கும், படித்து பயன் பெறுக .அதனால் இங்கு அதன் பட்டியல் தந்து வரிசையாய் விளக்கி போரடிக்கப்போவதில்லை.(வேறமாதிரி வித்யாசமா போர் அடிப்போம் )

சில மாதங்களுக்கு முன் இப்படி ஒரு க்ரீன்டீ  மகாத்மிய பதிவு ஒன்றை படித்துவிட்டு உடனே சூப்பர்மார்க்கெட் சென்றதால் ,உணர்ச்சி வசப்பட்டு ஒருபேக் டிப் க்ரீன்டீயும் ,க்ரீன்டீ தூளும் வாங்கினேன் .அதிகாலை வெறும்வயிற்றில் க்ரீன்டீ குடித்தால் மிகசிறப்பு என்று கேள்விப்படவே ,மிகபரபரப்பாக  ப்ரஷர்குக்கருக்கு சமமாக ப்ரஷருடன் சமையல் ,டிபன்,காபி ,லஞ்ச் பாகிங் – வேலைகளை செய்யும் போது  நேரமில்லாத்தால் அப்படியே விட்டுவிட்டேன்.பின் ஊரிலிருந்து அம்மா,அப்பா இங்கு வந்திருந்தபோது  அம்மா எல்லாவற்றிலும் உதவியதால்,சரி காலையில் பந்தாவாக பால்கனியில் நின்று க்ரீன்டீ குடிக்கலாமே என ஆரம்பித்தேன்.முதல் சில நாட்கள் க்ரீன்டீயை குடித்துவிட்டு குமட்டலை கஷ்டப்பட்டு அடக்கி,டிபன் சாப்பிடும் வரை அதிகம் பேசாமல் எல்லாம் சமாளித்தேன்,சில நாட்கள் குபீர் வாந்தியை அடக்கவே முடியவில்லை.அம்மா “என்னாச்சி?” எனக்கேட்க “இந்த டீ ரொம்ப கன்றாவியா இருக்கும்மா” என்ற உண்மையை சொல்லி அசடுவழிய வேண்டியிருந்தது . என்அம்மாவும் “ஒருவேளை இந்த மாதிரி வாந்தி வரவச்சு பித்தமெல்லாம் இந்த டீ போகவைக்குதோ? ” எனக் கேட்க ,இனி இது ஆவரதில்லை.. என்று முடிவுகட்டி மிச்ச தூளையும்,சாஷேக்களையும் பேக் செய்து எட்டாத செல்ஃபில் போட்டுவிட்டேன்.

அவ்வப்போது மறுபடி க்ரீன்டீ மாத்மிய ஈமெயில்கள்,ட்வீட்டுகள் பார்த்தாலும் “ப்ப்பாஆஆ”  டேஸ்டும் குபீர் குமட்டலும்  நினைவு வந்துவிடும்.சென்றமாதம் இனி பயங்கர ஹெல்த் கான்சியசாக, பிட்நெஸ் மதத்திற்கு  கன்வர்ட் ஆகிவிட ஆசை வந்தது.தினம் வாக்கிங், சாப்பாட்டில் ந்யூட்ரிஷன் கவனம் என மாறி, அது ப்ரச்சினைஇல்லாமல் தொடர்ந்ததால் அதோடு க்ரீன்டீயயும் முயற்சிக்க ஆரம்பித்தேன். க்ரீன்டீயில் தேவையான அளவு சர்க்கரை (எக்கச்சக்கமாக) சேர்த்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து,தேன் மற்றும் எலுமிச்சை கலந்து ,.வெவ்வேறு ப்ராண்ட்… என சாம,தான,பேத,தண்டம் அனைத்தும் படுதோல்வி அடைந்தது! தகிடுத்த்தம் தான் வழி என முடிவெடுத்தேன். எப்படியாவது   குடித்துவிட முடிவுசெய்து, க்ரீன்டீ தயாரித்து வடிகட்டி  ஆறவைத்து ஆறியதும் ஒரே மடக்காய் குடித்துவிட்டு ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட பழகினேன், குமட்டல் வரவில்லை.வெற்றி முழக்கத்தோடு இப்போது, பரிந்துரைக்கப்பட்ட 3-4 கப் ஒரு நாளைக்கு குடிக்கப் பழகி ஆகிவாட்டது .க்ரீன் டீ குடித்த உடன் இதுபோல் ஆசுவாச படுத்திக்கொள்ள தேன் ,உலர்திராட்சை ,பழத்துண்டு என ஹெல்தியாகவோ அல்லது ஆபத்திற்குபாவமில்லை என அன்ஹெல்தி தின்பண்டங்கள் (மிச்சர் முதல் கேக் வரை )மிகசிறிய அளவு சுவைத்தோ கசப்பை போக்க பழகலாம் .

இத்தனை கஷ்டப்பட்டு அதை குடித்துதான் ஆகவேண்டுமா? நிறுத்திவிடலாமே என்றால் அதனால் கிடைக்கும் கண்கூடான பலன்கள் அப்படி செய்ய விடுவதில்லை.பலன்களா? நிஜமாவா!?உண்மையாவா!?என்று நீங்கள் ஆச்சர்யப்பட்டு கேட்டால் உடனே “வாங்க லேபுக்கு” என்று ஹாலிலிருந்து கதவைத்திறந்து லேபிற்கு அழைத்துசெல்ல விளம்பரங்களில் வருவதுபோல் வீட்டில் லேப் இல்லை! புள்ளிவிவரங்களும் இல்லை. ஏனென்றால் எதையும் சின்சியராய் பாலோவ்  செய்து ,செக் செய்து குறித்து கொள்ளும் பழக்கம் இல்லை .உறுதியாக குறிபிடத்தக்க இரண்டு பலன்கள் :முதலில்  வெயிட்லாஸ் – க்ரீன்டீ மட்டுமில்லாமல் உணவுகட்டுப்பாடு (உஸ்ஸ்ஸ்), ஓட்ஸ் டிபன்கள்,பழங்கள் ,தினம் வாக்கிங், தினம் ஒருமணிநேரம் வாண்டுகள் பின் ஓடி செய்யும் ஸ்கூல் பேரண்ட்வாலின்டியரிங்,சமீபத்திய ஹேர்கட் என எல்லாம் சேர்ந்து 2கிலோ எடை குறைந்திருக்கிறது.நடுவில் ஒன்றிரண்டு ஹோட்டல் விசிட்கள்! ,மழை காரணமாக வாக்கிங் தப்பித்தல்கள்  என யோசித்து பார்த்தால் எடை குறைப்பில் க்ரீன்டீ பங்கும்  உண்டென நம்புகிறேன் ( நம்பிக்கை அதுதானே எல்லாம் ). அடுத்து ,புத்துணர்வு –  உற்சாகம் பொங்கி வழிவதோ ,சுறுசுறுப்பு பெருகிஓடுவதோ என்பதைவிட கிரீன் டீயால் சோர்வு ,தூக்கம் கண்டிப்பாக நீங்குகிறது .காலை எழும் அலாரம்சிக்னெஸ் இப்போது பகலில் தெரிவதில்லை .தூக்கதால்கூட விரட்டமுடியாத என் தூங்குமூஞ்சிதனத்தை விரட்டும் ஒரே விசயம் க்ரீன்டீ மட்டுமே,அதற்காகவே இதை தொடர இருக்கிறேன்

இதுபோல பிடிக்காத நல்லவிஷயங்களை செய்து பழகுவதால் ,”இதையே செஞ்சுட்டோம்… இனி எவ்வளவோ செஞ்சிடலாம்” என்னும் மனநிலை போனஸ் பெனிபிட் .கிரீன் டீ சுவைக்கு என்ன குறைச்சல்? ,நன்றாகத்தானே இருக்கிறது ?என்பவர்கள் கண்டிப்பாக விசேஷ பிறவிகள், @iKaruppiah இவரைப்போல. கிரீன் டீக்கே  மூவிங் ஜீப்பில் அடாவடியாய் ஏறி ரவுடி ஆகியிருக்கும் இந்த வேளையில் ஹெர்பல் டீ தெரியுமா ,ஊலாங் சா தெரியுமா என்று யாராவது கேட்கும்போது “வாழ்றதுக்காக சாகற அளவு ரிஸ்க் …..” வசனம் ஞாபகம் வருகிறது .இப்போதைக்கு கிரீன் டீக்கு மட்டுமே நான் கியாரண்டீ .யான் பெற்ற சகிப்புத்தன்மை, பெருக இவ்வையகம் 🙂 

 

  

பொன் செய்யும் மருந்து

Aside

The Alchemist -Paulo Coelho .இந்த புத்தகத்தை சமீபத்தில் மறுமுறை  படித்து முடித்ததிலிருந்து இதைபற்றி பகிர ஆசைவந்தது.Alchemist என்னை வசீகரித்த நாவல். 190 பக்கங்கள், எளிய ஆங்கில மொழிபெயர்ப்பு ,பாசிட்டிவ் ஃபீல் குட் கதை.

Motivational books என்று வாழ்க்கை தத்துவத்தை பிழிவது, அறிவுரை மழை பொழிவது ,தினம் காலை 15 நிமிடம் முன்பு எழுந்தால் உங்கள் நாளில் 1 மணிநேரம் கண்டிப்பாக மிச்சமாகும் என்று சத்தியம் செய்வது ,பானிபூரி சாப்பிடுவதோ பாத்ரூம் கழுவுவதோ ரசித்து அனுபவித்து! செய்யுங்கள் – என்னும் வகை “நான் சொல்றேன் நீ கேளு” புத்தகங்கள் எனக்கு கொஞ்சம் அலர்ஜி.அந்த வகையில் Paulo Coelhoவின் புத்தகங்கள் philosophy/motivational வகைகளில் ஒரு புரட்சி.

இந்த புத்தகத்தின் கதை ஒரு ஆடு மேய்க்கும் இளைஞன்(சான்டியாகோ) தன் கனவில் கண்ட புதையலைதேடி அடைவதைப்பற்றியது.அவன் தன் கனவு புதையல், பிரமிடுகளில் இருக்கிறது என நாடு கடந்து ஈஜிப்ட் செல்கிறான் பாலைவனங்களை கடக்கிறான்,அங்கே எந்த உலோகத்தையும் பொன்னாய் மாற்றும் சக்தி கொண்ட alchemistஐ சந்தித்து ,அவர் துனையோடு புதையலை தேடுகிறான்,பல சோதனைகளுக்குப் பின் அவன் தேடிய புதையல் அவன் சொந்த நாட்டிலேயே இருப்பதை அறிந்து தன்நாட்டுக்கு வந்து அதை கண்டெடுக்கிறான்.தன் பாலைவன காதலியை கைபிடிக்க வெற்றியோடு செல்ல தயாராகிறான்.

இந்த கதையில் வரும் ஒரு ஸ்படிக வியாபாரி தன் கனவை நினைவாக்கினால் அதன்பின் வாழ்க்கை வெறுமை ஆகிவிடுமோ என அஞ்சி கனவை கற்பனையிலேயே கழித்து தன்னுடைய தினசரி வாழ்வில் இருந்து வெளிவராமல் இருக்கிறார்.மற்றொரு ஆங்கிலேயரோ Alchemy வித்தையை கற்கவேண்டி பலவருடமாய் புத்தகங்கள் படித்து,தேர்ச்சி பெற்று alchemistஐ சந்திக்க வருகிறார்.கதை நாயகன் சான்டியாகோ தன் கனவு நிச்சயம் நனவாகும் என நம்பி அதைநோக்கியே பயனித்த வண்ணம் இருக்கிறான்.வெற்றியும் பெறுகிறான்.

இந்த கதையில் உள்ளதைப்போல் அனைவருக்குள்ளும் பொன் செய்யும் மருந்தின்மேல் ஆர்வம் உண்டு,சிலர் அது கிடைத்தால் வரும் மகிழ்ச்சியை கற்பனையில் மட்டுமே கண்டு மகிழ்கின்றனர் ,சிலர் அதைத் தேடி அலைந்து கடும் சோதனைகளும், பலகால உழைப்புக்குப் பின் அதில் வெற்றி/தோல்வி  பெறுகின்றனர்.இந்த கதையின் நாயகன் மட்டுமே பொன் செய்யும் மருந்தின் சூட்சமத்தை புரிந்து கொள்கிறான்.
பொன் செய்யும் மருந்து மற்ற உலோகத்தை, அதைவிட மேம்பட்டதான தங்கமாய் மாற்றுகிறது.Alchemy நாம் நம்மைவிட மேம்பட்டவர்களாய் நம்மை மாற்றுவதில் இருக்கிறது.அப்படி எல்லாவகையிலும் தன் கனவு புதையலுக்கு தன்னை தகுதியானவனாக,மேம்பட்டவனாக மாற்றி கொள்ளும் பொருமையும்,அர்ப்பணிப்பும் உள்ள சான்ட்டியாகோ தன் புதையலை அடைகிறான்.

இந்த கதையில் குறிப்பிடத்தக்க மற்றொன்று கதை நெடுக அந்த இளைஞன் படும் துன்பங்களையும் போராட்டங்களையும்விட  அவன் ஊக்கமும் ,நம்பிக்கையும் பொறுமையுமே  பெரிதாய் பேசப்படுகிறது.